உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி இதுவரை 747 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், உயர் நீதிமன்றில் 14 வழக்குகளில் 100 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
மேலும், செனல் 4 ஊடாக வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள் மற்றும் அதற்குப் புறம்பான விசாரணைகளின்போது வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெளிவரும் உண்மைகளின் அடிப்படையில் மேலும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அத்துடன், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்த விசாரணைகள் புதிய கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, 12 சிவில் சாட்சிகள், 7 இராணுவத்தினர், 24 பொலிஸ் அதிகாரிகள், 3 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 48 பேரிடம் வாக்குமூலம் பெற்று மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
